ஆக்கிரமிப்பு விவகாரம்! ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே வாக்குவாதம்!
திருச்செந்தூர் அருகே ஆக்கிரமிப்பு பிரச்னையில் தனது வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்களுடன் ஜி.பி.முத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பெருமாள்புரம் என்ற கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தெரிவித்துள்ளார். தனிநபர் ஆக்கிரமிப்பால் 20 ஆண்டுகளில் கீழத்தெரு மாயம் எனவும், தனக்கும், குடும்பத்தினருக்கும் தனிநபர் தொந்தரவு அளிப்பதாகவும் ஜிபி முத்து புகார் அளித்துள்ளார். புகாருக்கு நடவடிக்கையில்லை என்றால் தீக்குளிப்பேன் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஜிபி முத்து புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே ஆக்கிரமிப்பு பிரச்னையில் தனது வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்களுடன் ஜி.பி.முத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது ஊரில் கீழத்தெருவை காணவில்லை என ஜி.பி.முத்து ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜி.பி.முத்து ஒழிக என மக்கள் கோஷமிட்டபோது, ஜி.பி.முத்துவும் தனக்குத் தானே ஒழிக என கோஷமிட்டார்.


