கல்லணை நீர் திறப்பு : திருச்சி விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..
கல்லணையில் தண்ணீர் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (15.06.25 - ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் தஞ்சை டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக முதன் முறையாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து மாலை 7 மணி மணியளவில் தஞ்சை இராமநாதன் ரவுண்டானாவில் இருந்து - பழைய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ செல்ல இருக்கிறார். ரோடு ஷோ முடிந்தவுடன் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து தஞ்சை அரசினர் ஓய்வு இல்லத்தில் இரவு தங்கி ஓய்வெடுக்கவுள்ளார்.
மேலும், நாளை ( 16.06.25 - திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் தஞ்சை மஹாராஜா மஹாலில் நடைபெறும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரின் தம்பி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு காலை 11 மணியளவில் தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மைதானத்தில் 1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு அங்கிருந்து திருச்சி விமானம் நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்புவார் எனக்கூறப்படுகிறது.


