ஓம்கார் பாலாஜியை உள்நோக்கத்தோடு கைது செய்துள்ளது காவல்துறை - ஹெச். ராஜா குற்றச்சாட்டு
Nov 18, 2024, 08:00 IST1731897017000
ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நக்கீரன் கோபாலை கண்டித்து பேசிய இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜியை உள்நோக்கத்தோடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் திரு.ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு.அர்ஜூன் சம்பத் அவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்பு எத்தனையோ சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட போது அவர்கள் மீது வழக்குத் பதிவு செய்த காவல்துறை அவர்கள் அனைவரையும் இப்படி புகைப்படம் எடுத்து அதை யூடியூப் சேனல்களுக்கு அனுப்பி அதை பரப்புரை செய்திருக்கிறதா? ஓம்கார் பாலாஜியை மட்டும் அவமதிக்கும் நோக்கத்தோடு திமுக ஆதரவு மற்றும் இந்து விரோத யூடியூப் சேனல் U2Brutusன் X தளத்தில் வெளியிட்டு அவமதிக்க அனுமதித்தது ஏன்? ஓம்கார் பாலாஜி அவர்களையும், அர்ஜூன் சம்பத் அவர்களையும் கைது செய்திருக்கிற காவல்துறை இதேபோல் இதற்கு முன்பு பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் திமுக அரசின் அவலங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தினாலோ அல்லது அரசின் மோசமான நிர்வாகம் குறித்து பேசினாலோ உடனே வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் அதே தமிழக காவல்துறை இதுவரை தமிழகத்தில் 1 கிராம் அளவு சிந்தெடிக் போதைப் பொருள்களை கைப்பற்றி இருக்கிறதா? போதைப்பொருள் மாஃபிக்களை கைது செய்திருக்கிறதா? இதுவரை மிகப்பெரிய போதைப்பொருள் மாஃபிக்களை கைது செய்தது மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தான்.
இதுவரை தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் ஒரே ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியையாவது கைது செய்திருக்கிறதா அதுவும் இல்லை. இதுவரை தமிழகத்தில் பயங்கரவாதிகளை கைது செய்து நடவடிக்கைகளை எடுத்து வருவது தேசிய பாதுகாப்பு முகமை (NIA) தான். போதைப்பொருள் மாஃபியாக்களை, பயங்கரவாதிகளை கைது செய்யத்தான் தமிழக காவல்துறையால் முடியவில்லை ஆனால் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக அவதூறு பரப்பி நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு ஆளான நக்கீரன் கோபால் மீதோ அல்லது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக வன்மத்தை வெளிப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீதோ ஒரு வழக்கு கூட பதிவு செய்யாதது ஏன்? அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்து தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள தமிழக அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி அவர்களின் சகோதரர் திரு.அசோக்குமார் அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறாரே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக காவல்துறை எந்த முயற்சியும், நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தமிழக காவல்துறை நேரடியாக தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் தானே இருக்கிறது. அப்படியானால் தமிழக முதலமைச்சர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லையா? அல்லது தமிழக காவல்துறை செயலிழந்துவிட்டதா?இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ஜனநாயக முறையில் தங்களுடைய கருத்துகளை பொதுவெளியில் பதிவு செய்வதை காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து திமுக அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்வதும், அறவழி போராட்டங்களை முடக்க நினைப்பதும் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடு. போதைப்பொருள் மாஃபியாக்கள் மீதோ, பயங்கரவாதிகள் மீதோ நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தில் இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தை மத்திய அரசு நேரடியாக கண்காணிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதே நிதர்சனம் என குறிப்பிட்டுள்ளார்.