“Happy family day” கேக் வெட்டி கொண்டாடிவிட்டு குடும்பத்துடன் தற்கொலை! புற்றுநோய் ஏற்பட்டதால் விபரீத முடிவு

 
s s

சென்னையில் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் விஷ கேக் கொடுத்து குழந்தைகளை கொன்றுவிட்டு, மின் விசிறியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் சங்கர மடம் பகுதியை சேர்ந்தவர் சகாய செபாஸ்டின். இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் வேர் ஹவுஸில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரெக்ஸிபியூலா என்ற மனைவியும், இமான் ஆண்டோ(4) இவாஞ்சலின்(8) என இரு பிள்ளைகள் உள்ளனர். பியூலா புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். பல்வேறு மருத்துவ சிகிச்சை அளித்தும் பியூலா உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் செபாஸ்டின் இந்த உலகத்தில் வாழ வேண்டாம் என முடிவு செய்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள எண்ணியுள்ளார்.


இதனை தொடர்ந்து செபாஸ்டின் நேற்று இரவு வீட்டருகே உள்ள கேக் கடைக்கு சென்று கேக் வாங்கி வந்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். கேக் சாப்பிட்ட சில நிமிடங்களில் மகன் இமான் ஆண்டோ மயங்கி விழுந்தார். அவரை தொடர்ந்து மனைவி மற்றும் மகள் இருவரும் மயங்கி விழுந்ததை பார்த்த செபாஸ்டின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை திறந்து பார்த்த போது செபாஸ்டின் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி பிள்ளைகள் தரையில் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செம்பியம் காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து, நான்கு பேரையும் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் செபாஸ்டின் மற்றும் அவரது மகன் இமான் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பியூலா, அவரது மகள் இவாஞ்சலின் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

பின்னர் போலீஸார் தந்தை -மகன் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட செபாஸ்டின் தன் மனைவி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள எண்ணி நேற்று இரவு கடையில் இருந்து Happy family day எழுதிய கேக் வாங்கி வந்து, அதில் விஷத்தை கலந்து கொடுத்து  விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி வாந்தி எடுத்து காலையில் நினைவு தெளிந்த பின் உடனே காவல்துறைக்கும், பக்கத்து வீட்டாருக்கும் தகவல் தெரிவித்ததால், 
மனைவி மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதால் கேக்கில் விஷம் கலந்து கொடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது தெரியவந்தது.