‘சத்திரிய சான்றோர் படை’... நகைகளை பறிகொடுத்தப்படி புதிய கட்சி பெயரை அறிவித்த ஹரி நாடார்
சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஹரி நாடார் தெரிவித்துள்ளார்.
நடமாடும் நகைக்கடையாக அறியப்பட்டவர் ஹரி நாடார். சுமார் மூன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு, அவர் வலம் வருவதைப் பார்க்க மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்ததுண்டு. ராக்கெட் ராஜாவுடன் இணைந்து பனங்காட்டுப்படை கட்சி நடத்தி வந்த ஹரி நாடார், 2021 இல் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 37,724 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தலுக்குப் பின்னர் பல்வேறு வழக்குகளில் சிக்கி 3 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஹரி நாடார் அண்மையில் வெளிவந்தார். அவர் சிறையில் இருந்த போது ராக்கெட் ராஜாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை கொண்ட தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வந்த ஹரி நாடார், நகைகள் ஏதுமின்றி, வெறும் கழுத்துடன் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆலங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆலங்குளம் தொகுதி மக்கள் எனக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தனர். எனவே ஆலங்குளத்தில் வைத்து, சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் தனது புதிய கட்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் கட்சிக் கொடி, நிர்வாகிகள் குறித்த விவரத்தை அறிவிப்பேன். நாடார்களின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் வகையில் வரும் 2026 பேரவைத் தேர்தலில் கணிசமான எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவார்கள். சமுதாய இளைஞர்கள் பட்டிதொட்டியெங்கும் கட்சியின் பெயரை கொண்டு செல்வார்கள். தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி அளித்திருந்தால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு சம்பவம் நிகழ்ந்திருக்காது. அண்டை மாநிலங்கள் கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் கள்ளுக்கடைகள் திறக்கப்படிருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் கள்ளுக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.
ராக்கெட் ராஜாவுடன் இணைந்து பனங்காட்டு படை கட்சியில் பயணித்த ஹரி நாடார் தற்பொழுது திடீரென தனி கட்சியை தொடங்கியிருப்பது தென் மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.