நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு.. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு..

 
Natham  Viswanathan Natham  Viswanathan


தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில்  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டார். திமுக சார்பில் ஆண்டி அம்பலம் போட்டியிடிருந்தார்.  தேர்தலில் 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

natham viswanathan

அதில், அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் , தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது போன்ற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன்  தேர்தல் நடத்தை விதிகளை மீறி,  வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி  நேரம் பரப்புரையில் ஈடுபட்டதாகவும், உச்சவரம்புக்கு மேல்  அதிகளவு செலவு செய்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார்.  

இந்த வழக்கை நீதிபதி பி..டி.ஆஷா விசாரித்து வந்தார். இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை விசாரிக்க எந்தக் காரணமும் இல்லை என்றும், வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து நத்தம் விஸ்வநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தப்போது நீதிபதி ஆஷா,  தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான காரணங்கள் இருப்பதாகக் கூறி , ஆண்டி அம்பலத்தின் மனுவை நிராகரிக்க மறுப்பு தெரிவித்தார்.  மேலும், நத்தம் விஸ்வநாதத்தின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.