தலை சுற்றவைக்கும் தக்காளி விலை.. ரேஷன் கடையில் விற்பனையா?? அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை..

 
தலை சுற்றவைக்கும் தக்காளி விலை.. ரேஷன் கடையில் விற்பனையா?? அமைச்சர் பெரியகரிப்பன் நாளை ஆலோசனை..

தக்காளி விலை உயர்வு மற்றும் தக்காளியை நியாய விலைக் கடைகளில்  விற்பனை செய்வது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக  தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது.  கடுமையான வெயில் மற்றும் திடீரென பெய்த மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.  இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு பசுமை பண்ணை காய்கறி கடைகளில் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது.  தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.  

தக்காளி

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும் தக்காளி விலை உயர்ந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. அத்துடன் தக்காளியின் விலை மேலும் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது, வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வது, ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.