பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் அறிவுறுத்தல்

 
Ma Subramanian Ma Subramanian

முக்ககவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அறிவுறுத்தல்கள் தொடர்ந்து அமலில் தான் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பை ஒப்பிடும் போது இது 47 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் இது கடந்த 6 மாதங்களில் பதிவாகிய புதிய உச்சம் ஆகும். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  நாட்டில் தொற்று பாதிப்பு 4 மடங்காக உயர்ந்துள்ளது. முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும். காவல்துறையினர் அபராதம் விதித்துதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை.  கொரோனா தொடங்கிய போது அறிவித்த முக்ககவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அறிவுறுத்தல்கள் தொடார்ந்து அமலில் தான் உள்ளன. திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கொரோனா பரவல் குறித்து பெரிய அளவில் பதற்றம் வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். நான்கு ஐந்து நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.