"தக்காளி வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம்" - ராதாகிருஷ்ணன் தகவல்!!

 
tn

கேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் ,உடல் வலி, கை கால்கள்  வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட பல அறிகுறிகளுடன் இந்த வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது.

tn

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கொல்லம்  மாவட்டத்தில் மட்டும் இதுவரை 85 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Radhakrishnan

இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை; இந்த வகை காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளிபோல புள்ளிகள் வரும்.  இது ஒரு வகை காய்ச்சல் தான். இதனால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இருந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று அவர் உறுதியளித்துள்ளார். தக்காளி காய்ச்சல் என்பது வைரஸால் ஏற்படும் நோய். இது ஆபத்தானது அல்ல, ஆனால் கவனமாக இருப்பது முக்கியம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது .