3 நாட்களுக்கு கனமழைக்கான அலர்ட்... சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய செய்தி!
நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து நீலகிரிக்கு வரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரும் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்படவும், நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரி ஏற்படவும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் அதிவேகமாக காற்று வீசுவதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இருப்பினும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வேறு மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பணிகள் பாதுகாப்பாக வரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உதகை முதல் கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் என்னும் இடத்தில் சாலை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மற்றும் கூடலூர் வரும் கனரக சரக்கு வாகனங்கள் (அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களைத் தவிர) இன்று முதல் ஒரு வாரத்திற்கு வந்து செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.