தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு.. ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..
தமிழ்நாட்டில் ஜூன் 14, 15 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மாநிலங்களின் வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஜூன் 14, 15 ஆகிய நாட்கள் 21 செமீ-க்கும் மேலாக அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு சிவப்பு எச்சரிக்கை(Red Alert) விடுத்துள்ளது. மேலும், ஜூன் 13, 16, 17 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 12 செமீ முதல் 20 செமீ வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்துள்ளது.

அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள்ளுக்கு இடி, மின்னல், 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதேபோல், கர்நாடகாவிலும் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஜூன் 12, 13, 14, 15 ஆகிய 4 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சிகப்பு எச்சரிக்கையும், ஜூன் 16, 17 ஆகிய 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
மேலும், கேரளாவிலும் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கொஞ்சம் மாற்றாக ஜூன் 12, 13 ஆகிய 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், ஜூன் 14, 15, 16, 17 ஆகிய 4நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.


