ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர் தரிசனம்- பக்தர்களால் திணறும் சபரிமலை
சபரிமலை மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை மண்டல கால பூஜைக்காக 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வழக்கமாக முன்பதிவு செய்தவர்கள் 30 ஆயிரம் பேர் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அன்றைய தினம் மட்டும் 55 ஆயிரம் பேர் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து துவக்க நாட்களில் பெருமளவு பக்தர்கள் வருகை குறைந்து காணப்படும் நிலையில் இந்த ஆண்டு முதல் நாள் ஐயப்ப பக்தர்களின் வருகை என்பது லட்சத்தை தாண்டியது. மேலும் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை 70 ஆயிரம் ஸ்பாட் புக்கிங் 20 ஆயிரம் பேர் என மொத்தம் 90 ஆயிரம் பேர் அனுமதிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளே கட்டுக்கடங்காத ஐயப்ப பக்தர்களின் வருகை காரணமாக ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதிகளவு பக்தர்கள் வருகை காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நீலிமலை, அப்பாச்சி மேடு, சரங்குத்தி உள்ளிட்ட பகுதிகளில் தடுத்து நிறுத்தி கட்டம் கட்டமாக பக்தர்களை சன்னிதானம் பகுதிக்கு அனுப்பி வருகிறார்கள். இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர் தொடர்ந்து இன்றும் அதே அளவு பக்தர்கள் காலை முதல் சுவாமி தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானம் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய நடை பந்தல் சிறிய நடைபந்தலில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.


