சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்...கடும் போக்குவரத்து நெரிசல்!
ஏராளமான மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் சென்னை அடுத்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். மக்களின் வசதிக்காக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் கார், இருசக்கர வாகனம், ரயில், விமானம் உள்ளிட்டவற்றிலும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னையில் இருந்து தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அடுத்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாநகர பேருந்துகள், கார்கள் அணிவகுத்து நிற்பதால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் வரை சுமார் 3 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


