பீக் ஹவர்ஸில் கனரக வாகனங்களுக்கு தடை.. 100 நாட்களுக்கு வண்டி கிடைக்காது - காவல் ஆணையர் உத்தரவு..
பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதித்தும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு திரும்ப ஒப்படைக்கக்கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்நாதன் - யாமினி தம்பதி. இவர்களது மகள் சௌமியா(10) புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். யாமினியே தினமும் தனது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அந்தவகையில் நேற்று காலை வழக்கம்போல் இருசக்கர வானத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, பேப்பர் மில்ஸ் சாலை, வால்கிங்சர் சாலை சந்திப்பு அருகே வரும்போது நிலை தடுமாறி யாமினியும், சிறுமி சௌமியாவும் கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமி மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணியிலிருந்து மதியம் 12 வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் உட்பட கனரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் உட்பட எந்த வாகனங்களையும் குறைந்தது 100 நாட்களுக்கு ஒப்படைக்கக் கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


