“கரூர் கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை”- ஹேமமாலினி

 
''கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை''  - ஹேமமாலினி ''கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை''  - ஹேமமாலினி

கரூர் மாவட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய பாஜக சார்பில் எம் பி ஹேமமாலினி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி,நட்டா அந்த குழுவை அமைத்தார். அந்த குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கரூர் வந்த ஹேமா மாலினி தலைமையிலான குழுவினர் கரூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் செருப்புகள் சிதறி கிடக்கிறது. அதேபோல மரக்கிளைகள் உடைந்த பகுதி, ஜெனரேட்டர் இருந்த இடம் உள்ளிட்டவை போலீசார் தடுப்புகள் அமைத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த இடத்தையும் விசாரணை குழுவினர் பார்வையிட்டனர். எங்கு,எங்கு மக்கள் அதிகமாக விழுந்தார்கள் என்பதை கேட்டு அந்த இடங்களையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் அந்த சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது விசாரணை குழுவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, அனுராக் தாகூர் உள்ளிட்ட எம்பிக்களும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அந்த குழுவினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கின்றனர். அதனை அடுத்து குழுவாக பிரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Image

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. அதில் சந்தேகம் உள்ளது.பெரிய நடிகரான விஜய் பிரச்சாரம் செய்ய குறுகிய இடத்தில் அனுமதி கொடுத்தது நியாயமில்லை. அரசியல் வரலாற்றில் இதுபோன்ற விபத்து இதுவரை நடந்ததில்லை. விஜய் பரப்புரையின்போது மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்டவை சந்தேகத்தை கிளப்புகிறது.” என்றார்.