"நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீங்க”- மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

 
ramadoss

மாம்பழம் சின்னத்தை முடக்கம் செய்யவும், தன்னை தலைவராக அங்கீகரித்து பதிவுசெய்யும் வரை தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் அறிவிப்பை தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் தேடிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

Anbumani and his wife 'forced' BJP-PMK alliance on me, alleges Ramadoss

பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து,  நிறுவனர் ராமதாசை தலைவராகவும், அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று, பா.ம.க. சார்பில் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.அதேபோல, உள்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பா.ம.க. சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும்  மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2025 ம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து, 2026ம் ஆண்டு வரை பதவிக்காலம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் குற்றம் சாட்டினார். மேலும் ராமதாசை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், கட்சியை அன்புமணி அபகரித்துக் கொண்டார் என்றும்,35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ் தான் என தெரிவித்தார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், இதே விவகாரம் தொடர்பாக செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பா.ம.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. மாம்பழம் சின்னம் முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என குறிப்பிட்டார். விசாரணையின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள், தந்தை சொல்வதை மகன் கேட்பது இல்லை என்று பதிலளித்தார். அப்போது அன்புமணி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் 
விஜயநாரயணன் ஏற்கனவே ஒரு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சமரசம் செய்து வைக்க முயற்சித்தார் ஆனால் நடைபெறவில்லை. இந்த வழக்கு மனுவில் ராமதாஸ் போட்டுள்ள கையெழுத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். இதை மறுத்த ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், ராமதாஸ் நடை பயிற்சி மேற்கொள்கிறார். நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர்கள் தரப்பில் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட  நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கூறி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உன் கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்பதால், உரிமைகள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என கூறி, இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.