கும்கி யானைகளின் உதவியுடன் ஆட்கொல்லிப் புலியை தேடும் வனத்துறை!

 
tiger

நீலகிரியில் சுற்றித்திரியும் டி23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் ஆட்கொல்லிப் புலி ஒன்று சுற்றித்திரிகிறது. அந்த புலி இதுவரை 4 பேரைக் கொன்றுள்ளது. ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளையும் கொன்றுள்ளது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த புலியை பிடிக்க கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர். முதலில் டி23 என்று அழைக்கப்படும் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை 5 இடங்களில் கூண்டு வைத்தது. அந்த முயற்சி பலனளிக்காததால் புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டது.

court

புலியை சுட்டுப்பிடிக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தது. இதை ஏற்றுக் கொண்ட வனத்துறை, எக்காரணம் கொண்டு டி23 புலி சுட்டுக் கொல்லப்படாது என்று உறுதியளித்தது. இதையடுத்து, புலியை பிடிக்க 2 கும்கி யானைகள் மசினகுடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 10ஆவது நாளாக இன்று கும்கி யானைகள் மீது அமர்ந்து வனத்துறையினர் புலியைத் தேடி வருகின்றனர்.

elephant

இதனிடையே, புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆட்கொல்லி புலி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று மனுவில் தெரிவித்திருக்கிறார். அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கிறது.