மனுஷி திரைப்படத்தில் சில காட்சிகள், வசனங்களை நீக்க ஐகோர்ட் உத்தரவு
மனுஷி திரைப்படத்தில் சுட்டிக்காட்டிய காட்சிகளை நீக்கி மீண்டும் விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரத்தில் சென்சார் சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்தபடத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, சென்சார் போர்டு தரப்பில், மனுஷி திரைப்படத்தில் 25 காட்சிகளை நீக்கவும் ,12 காட்சிகள் மாற்றியமைக்கவும் பரிந்துரைகளை வழங்கி இருந்தது. வெற்றிமாறன் தரப்பில், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாக சென்சார் போர்டின் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கடந்த ஆகஸ்ட் 24 ம் தேதி மனுஷி திரைப்படத்தை பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், படத்தில் கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம், ஆகியவை குறித்து வெளிப்படையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சென்சார் போர்டு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த சில காட்சிகளை நீக்க வேண்டாம், சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் காட்சிகள் வசனங்களை நீக்கி, மாற்றியமைத்து 2 வாரங்களில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சென்சார் போர்டு உரிய சென்சார் சான்றிதழை மனுஷி திரைப்படத்திற்கு இரண்டு வாரத்தில் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


