'வா வாத்தியார்' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
கடனை திரும்ப செலுத்தாததால் 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு சென்னை உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், அர்ஜுன்லால் சொத்துக்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்த ஞானவேல் ராஜா எந்த தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, கடன் தொகையை திரும்ப செலுத்தும் வரை “வா வாத்தியார்”படத்தை வெளியிடகூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்த பட நிறுவனம் தயாராக இருப்பதால், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்து விட்டதாக தெரிவித்து படத்திற்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, 'வா வாத்தியார்' படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டனர்.


