தி.நகர் விளையாட்டு விநாயகர் கோவிலை இடிக்க ஐகோர்ட் உத்தரவு!

 
தி.நகர் விளையாட்டு விநாயகர் கோவிலை இடிக்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு ரயில்வே பார்டர் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு விநாயகர் கோவிலை இடிக்க சென்னை மாநகராட்சிக்கும், தெற்கு ரயில்வேவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Highcourt

சென்னை தி. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலைய நடைமேடை பாலத்துடன் இணைப்பதற்காக பாலம் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்காக, ரங்கநாதன் தெரு - ரயில்வே பார்டர் சாலையில் அரசு நிலத்தில் அமைந்திருந்த விளையாட்டு விநாயகர் கோவில் மற்றும் 22 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து நான்கு வாடகைதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் 2018ம் ஆண்டு இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர், கோவில் அமைந்துள்ள நிலம், கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், வருவாய் துறை ஆவணங்களில் இருந்து அந்த நிலம் அரசு நிலம் என்பது தெளிவாவதாகவும் கூறி, கோவிலில் உள்ள சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, 15 நாட்களில் கோவிலை இடிக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும்  உத்தரவிட்டனர்.

சிலைகளை 15 நாட்களில் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை செயல்படுத்த கோவில் நிர்வாகம் தவறினால், உரிய நடவடிக்கைகளை எடுக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதுடன், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும்  உத்தரவிட்டு, வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.