அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கு உயர்கல்வித் தொகை!!

 
tn

 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியம் ரூ.8 கோடிக்கான காசோலை, ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை, பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான வரைவோலைகள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.11.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத்தை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையை சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.கோ.இராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார். மேலும், ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கு உயர்கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளையும், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4,000/- மற்றும் ரூ.2,000/- மாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளையும் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.8 கோடி அரசு மானியம் வழங்குதல்

tn

2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தின் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகச் செலவினங்களுக்காக தற்போது ரூ.6 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை குறைவாக உள்ள காரணத்தால் மேற்படி திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத் தொகை இவ்வாண்டு ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.8 கோடிக்கான காசோலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுசீந்திரம் கன்னியாகுமரி திருக்கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் 2020 ஆம் நிதியாண்டு வரை
மற்றும் பராமரிப்பு செலவிற்காக 2019 ஆம் ஆண்டு ரூ.3 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021 2022 ஆம் நிதியாண்டு முதல் அம்மானியத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி, கடந்த 27.12.2021 அன்று வழங்கினார்கள். தற்போது அத்தொகை போதுமானதாக இல்லாததால் இந்த நிதியாண்டு முதல் அரசு மானியத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 

ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், "ஒரு கால பூஜை திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் நலன் கருதி மேற்படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு 400 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட மைய நிதி ஏற்படுத்தப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கான உயர்கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கு உதவிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் கல்வி உதவித் தொகையாக அதிகபட்சம் ரூ.10,000/- அல்லது கல்லூரியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத் தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர்.

திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகை வழங்குதல்

th

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க முன்னோடி திட்டத்தை கொண்டுவந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி பள்ளிகளில் முழு நேரம் / பகுதி நேரம் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4,000/- மற்றும் ரூ.2,000/- மாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அர்ச்சகர், ஓதுவார், வேதாகமம், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்ப பாடசாலை ஆகிய 15 பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர பயிற்சிப் பள்ளிகளில் மாதந்தோறும் வழங்கப்படும் க்கத்தொகை ரூ.3,000/- லிருந்து ரூ.4,000/- மாகவும், பகுதி நேர பயிற்சிப் பள்ளிகளில் மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.1,500/- லிருந்து ரூ.2,000/- மாகவும் உயர்த்தி அந்தந்த திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும். இதன்மூலம் முழுநேர பயிற்சி பெறும் 212 மாணவர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.