இந்து முன்னணியின் முருக பக்த மாநாடு மக்களை பிளவுபடுத்தும் மாநாடு - அமைச்சர் சேகர் பாபு..
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு அரசியல் தேவைக்காக மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்த நடத்த கூடிய மாநாடு என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் தேர் ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திருத்தேர்கள், திருப்பணிகள், தங்கும் விடுதி, குடமுழுக்கு , அன்னதான திட்டங்கள் என திமுக ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. ரூ.81 லட்சம் செலவில் திருத்தேர் மற்றும் சாமித்தேர் கோயில் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தங்கத் தேர் செய்து தரப்படும். அதற்கான மரத்தேர், காப்பர் பூச்சு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 7 கிலோ அளவில் தங்கம் கொண்டு தங்கத்தேர் செய்யப்பட உள்ளது.
திமுக ஆட்சியில் 175 கோடி அளவிற்கு 134 புதிய தேர்கள் 130 கோயில்களில் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 75 தேர்த்களை புதுப்பிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. 5 தங்கத்தேர் அறிவிக்கப்பட்ட நிலையில் பவானியம்மன் கோயிலில் தங்கத் தேர் பக்தர்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. 9 கோயில்களுக்கு வெள்ளித்தேர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காளிகாம்பாள், நெல்லையப்பர், திருத்தணி கோயில்களில் வெள்ளித் தேர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தற்போது வரை 3 ஆயிரம் குடமுழுக்குகள் நடைப்பெற்றுள்ளன. இன்று மட்டும் 24 கோயில்கள், 8ம் தேதி 74 கோயில்களில் என இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். 4,000 கோயில்களின் பணிகளை நிறைவு செய்யும் நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.
திருச்செந்தூர் திருக்கோயில் பணிகளைப் பொறுத்தவரை பேருந்து நிறுத்தங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோயிலில் ரூ.400 கோடிக்கான திருப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த மாதத்திற்குள் முடிக்கக் கூடிய திருப்பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குடமுழுக்கு நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பல்வேறு திட்டமிடல்கள் நடைப்பெற்றுள்ளன. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேர விவகாரத்தில் நீதி அரசுப் பக்கம்தான் உள்ளது.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு; சங்கிகள் நடத்த உள்ள மாநாடு; அரசியல் மாநாடு. அதற்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது. அரசியல் தேவைக்காக மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்த நடத்த கூடிய மாநாடு. தமிழிசை சிறந்த அறிவாளி. அவரது ஆலோசனைகள் மூலம்தான் பாஜக போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியைத் தழுவுகிறது. ஒன்றிய அரசுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார்.
தவெக கல்வி விருது விழா குறித்த கேள்விக்கு, “திமுகவின் ஒரு மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உள்ளோம். திமுகவில் மொத்தம் உள்ள 68 மாவட்டங்களில் 3 லட்சம் பேருக்கு மேல் கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் ” எனத் தெரிவித்தார்.


