நேர்மையான வாக்காளர் பட்டியல்; நியாயமான முறையில் தேர்தல் நடத்துக - தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி திமுக தீர்மானம்..!!
திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டுக்கு கண்டனம், ஓரணியில் தமிழ்நாடு வெற்றிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டாவதாக, திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில், “தேர்தலை நடத்துவது மட்டுமல்ல - அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தன்னாட்சிபெற்ற அமைப்பிடம் இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்திலேயே தேர்தல் ஆணையத்திற்கு முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் - தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு - தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் கைகோத்து நிற்பதும் - பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளுக்குத் துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாக ஆக்குவதோடு கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜனநாயகத்தின் பாதுகாவலராகத் திகழும் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 17.7.2025 அன்றே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து “இறந்த வாக்காளர்களை நீக்குதல்” “BLO-க்கள் மற்றும் BLA-க்களுடன் ஒருங்கிணைப்பு” “பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக் கையேடுகளை வழங்குதல்” “அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல்”, “ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்யும் வேளையில் - தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் என இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


