வறுமையிலும் நேர்மை..! சாலையில் கிடந்த 20 சவரன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்..!

 
1 1

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - முத்துலட்சுமி தம்பதி, தங்களது மகள் அட்சயா தேவியின் திருமணத்திற்காக வாங்கிய 20 சவரன் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களுடன் திருவாரூர் வந்துள்ளனர். மார்ச் 8-ம் தேதி நடைபெறவிருக்கும் திருமணத்திற்காகப் பாதுகாப்பாக உறவினர் வீட்டில் கொடுத்து வைக்க எண்ணி, அந்த நகைகளை ஒரு கட்டைப் பையில் எடுத்துக்கொண்டு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருவாரூருக்கு வந்தனர்.

திருவாரூர் விருப்பாச்சி தெருவில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு இன்று காலை அவர்கள் ஆட்டோவில் சென்றனர். அப்போது நகைப் பையை ஆட்டோவின் பின்புறம் வைத்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பேருந்து நிலையம் செல்லும் வழியில் அந்தப் பை தவறி விழுந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. பையைத் தொலைத்ததை உணர்ந்ததும், மகளின் திருமண வாழ்க்கை என்னவாகுமோ என்ற அச்சத்தில் தம்பதியினர் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அதே சமயம், அந்தப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர் துரை என்பவர், சாலையில் கிடந்த கட்டைப் பையைக் கண்டெடுத்துள்ளார். அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த தங்க நகைகளையும் வெள்ளியையும் கண்டு திகைத்த அவர், சிறிதும் தயங்காமல் உடனடியாகத் திருவாரூர் நகராட்சி அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் பகிரப்பட்டது.

காவல்துறையினர் முன்னிலையில் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொலைந்த நகைகள் மீண்டும் கிடைத்ததைக் கண்டு முத்துலட்சுமி கண்ணீர் மல்கத் தூய்மைப் பணியாளர் துரைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தனது மகளைக் கட்டியணைத்து அவர் அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. மகளின் எதிர்காலமே அந்தப் பையில்தான் இருந்தது என அவர்கள் நெகிழ்ந்தனர்.

வறுமையிலும் நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் துரையைப் பாராட்டும் விதமாகத் திருவாரூர் நகர காவல் நிலையம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை போர்த்தப்பட்டது. மேலும், அவரது மனைவியையும் வரவழைத்துக் கௌரவித்து புத்தாடை வழங்கப்பட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் காத்த துரையின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.