இல்லத்தரசிகள் ஷாக்..! முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு..!

 
1 1

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்ப்பண்ணைகளில் தினமும் சுமார் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைகள் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள பல மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு மூலமாக தினந்தோறும் முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக முட்டை விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 590 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 90 பைசாவாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.

முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடு என உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டை கொள்முதல் விலை வரும் நாட்களில் மேலும் உயர் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றில் விலை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனால் இங்கும் முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால், கேக் செய்வதற்காக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேலும் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.