குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.. திருவொற்றியூரில் பரபரப்பு..

 
திருவொற்றியூர்


சென்னையை அடுத்த திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம்  திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

திருவொற்றியூரில் 24 வீடுகள் கொண்ட 4 அடுக்கு மாடி குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் அமைந்துள்ளது.  இந்நிலையில் நேற்றிரவு இந்தக் குடியிருப்பு கட்டடத்தில்  பயங்கர சத்தத்துடன்  விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேறினர்.

திருவொற்றியூர்

இந்நிலையில் இன்று காலை விரிசல் அதிகமாகி திடீரென குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. முன்கூட்டியே குடியிருப்பு வாசிகள் வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் இழப்புகள் தவிர்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவொற்றியூர்

இந்த திருவொற்றியூர் அரிவாக்குளம்  குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழைய கட்டடம் என்பதாலும்,  அண்மையில் பெய்த மழை கட்டட இடிபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் இடிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.