"இனி 2 மாத அட்வான்ஸ் போதும்"- வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமல்
இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது என்ற வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலாகவுள்ளது. வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாத உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு வீடு வாடகைக்கு விட்டால், சாதாரண ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினாலே போதும் என்று இருந்தது. ஆனால் இப்போது ஒப்பந்தத்தை இரண்டு மாதத்திற்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக ராஜன் என்பவர் தன் வீட்டை குமார் என்பவருக்கு வாடகைக்கு விடுகிறார். அவர்கள் ஜனவரி 1ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மார்ச் 1ஆம் தேதிக்குள் அதை அரசாங்க பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆதார் அடிப்படையில் எலக்ட்ரானிக் சரிபார்ப்பு முறை அனைத்து வாடகை ஒப்பந்தங்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி கையால் எழுதிய போலி ஒப்பந்தங்களோ, தவறான கையெழுத்துக்களோ இருக்க முடியாது. உதாரணமாக முன்பு சிலர் ஸ்டாம்ப் பேப்பரை மாற்றி எழுதுவார்கள். இப்போது அனைத்தும் ஆன்லைனில் பதிவாகும். எந்த நேரத்திலும் உங்கள் ஒப்பந்தத்தை ஆன்லைனில் சரிபார்க்க முடியும். வீட்டு வாடகைக்கு இரண்டு மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்க முடியாது. வணிக கட்டிடங்களுக்கு ஆறு மாத வாடகை வரை மட்டுமே. உதாரணமாக உங்கள் வீட்டு வாடகை மாதம் ரூ.15,000 என்றால், வீட்டு உரிமையாளர் உங்களிடம் ரூ.30,000க்கு மேல் முன்பணம் கேட்க முடியாது. சென்னை போன்ற நகரங்களில் சிலர் 10 மாத வாடகையை முன்பணமாக கேட்பார்கள் - இப்போது அது சட்டவிரோதம்.
12 மாதங்கள் முடிந்த பின்புதான் வாடகையை உயர்த்த முடியும், அதுவும் 90 நாட்கள் முன்னதாக எழுத்துபூர்வ அறிவிப்பு கொடுக்க வேண்டும். உதாரணமாக ஜனவரி 2025-ல் வீடு வாடகைக்கு எடுத்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் ஜனவரி 2026 வரை அதே வாடகைதான். அதன் பிறகு வாடகையை உயர்த்த வேண்டுமென்றால், அக்டோபர் 2025-ல் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவசர பழுதுபார்ப்பு பற்றி தெரிவித்தால், வீட்டு உரிமையாளர் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் குடியிருப்பவர் அதை செலவு செய்து வாடகையில் கழிக்கலாம். உதாரணமாக உங்கள் வீட்டில் குழாய் பழுதாகி தண்ணீர் கசிகிறது. உரிமையாளரிடம் தெரிவித்த பிறகு, அவர் 30 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால், நீங்களே பிளம்பரை அழைத்து ₹2,000 செலவு செய்யலாம். அடுத்த மாத வாடகையில் ₹2,000 குறைத்துக் கட்டலாம்.
வீட்டை சரிபார்க்க அல்லது உள்ளே நுழைய வீட்டு உரிமையாளர் குறைந்தபட்சம் 24 மணி நேரம் முன்னதாக எழுத்துபூர்வ அறிவிப்பு அளிக்க வேண்டும். உதாரணமாக வீட்டு உரிமையாளர் திடீரென்று சாவியுடன் வந்து உங்கள் வீட்டுக்குள் நுழைய முடியாது. முன்னதாக தெரிவிக்க வேண்டும். வாடகை தீர்ப்பாயத்தின் உத்தரவின்றி, சட்டப்படி குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல், வெளியேற்ற முடியாது. உரிமையாளரின் தனிப்பட்ட கோரிக்கையால் மட்டும் வெளியேற்ற முடியாது. உதாரணமாக உரிமையாளருக்கு நீங்கள் பிடிக்கவில்லை என்பதற்காக திடீரென்று வெளியேற்ற முடியாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற சட்டப்படியான காரணங்கள் இருந்தால் மட்டுமே, தீர்ப்பாயத்தின் அனுமதியுடன் வெளியேற்ற முடியும்.


