15 மாதங்களில் 4 முறை வீட்டுவசதித்துறை செயலாளர்கள் மாற்றம்: அன்புமணி கேள்வி

 
anbumani

அமைச்சரின்  விருப்பங்களை நிறைவேற்ற மறுப்பது தான் வீட்டுவசதித்துறை  செயலாளர்களின் மாற்றத்திற்கு காரணமா? என்று  தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்  செயலாளராக பணியாற்றி வந்த இ.ஆ.ப. அதிகாரி  சமய மூர்த்தி 4 மாதங்களில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளராக காகர்லா உஷா  நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 15 மாதங்களில் வீட்டு வசதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நான்காவது அதிகாரி இவர்.  நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை மாற்றும்  அதிகாரம் அரசுக்கு உண்டு என்றாலும் கூட, வீட்டு வசதித்துறை செயலாளர்கள்  அடிக்கடி மாற்றப்படுவது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும்  ஏற்படுத்தியிருக்கிறது.

govt

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு  வீட்டு வசதித்துறை செயலாளாராக நியமிக்கப்பட்ட ஹிதேஷ்குமார் மக்வானா கடந்த 2022-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2-ஆம் நாள் அப்பணியிலிருந்து மாற்றப்பட்டு புதிய  செயலாளராக அபூர்வா அமர்த்தப்பட்டார். அடுத்த  11 மாதங்களில், அதாவது கடந்த அக்டோபர் 16-ஆம் நாள் அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சமயமூர்த்தி  வீட்டு வசதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்  4 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில்  சமயமூர்த்தி வெளியேற்றப்பட்டு, புதிய செயலாளராக காகர்லா உஷா கொண்டு வரப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எந்தத் துறையிலும்  மிகக்குறைந்த காலத்தில் இத்தனை முறை செயலாளர்கள் மாற்றப்பட்டதில்லை.

தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) பதவி வழித் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.  சி.எம்.டி.ஏவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு அதிகம். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலங்களின் வகைப்பாட்டை மாற்றுவதற்கான  35 கோப்புகளும்,  ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பான 15 கோப்புகளும் சி.எம்.டி.ஏவின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. கடந்த முறை நடைபெற்ற சி.எம்.டி.ஏ கூட்டத்தில்  இந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க  வேண்டும் என்று சி.எம்.டி.ஏவுக்கு தலைவர் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்  வலியுறுத்திய நிலையில்,  அதற்கு  அதன் துணைத்தலைவரான  வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி மறுத்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

null



50 கோப்புகள் குறித்து முடிவெடுப்பதற்காக  சி.எம்.டி.ஏவின் கூட்டம் பிப்ரவரி 28-ஆம் நாள் புதன் கிழமை நடப்பதாக இருந்த நிலையில் தான், திடீரென அதன் துணைத்தலைவரான வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி மாற்றப்பட்டிருக்கிறார். கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் அமைச்சரின்  விருப்பத்தை நிறைவேற்ற மறுத்தது தான் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்த உண்மை நிலை என்ன?  சி.எம்.டி.ஏ தொடர்பாக முடிவெடுப்பதில் ஏற்படும் சர்ச்சைகளின் காரணமாக  வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது  ஏன்?  என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தியின்  இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.