கடலூர் விபத்து நடந்தது எப்படி? விபத்துக்கு காரணம் ஓட்டுநரா? கேட் கீப்பரா??.. நேரில் பார்த்தவர்கள் சொல்வது இதுதான்.. முழு விவரம் இதோ..!!
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில் வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே செம்மங்குப்பம் என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று இந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. 95 கிமீ வேகத்தில் ரயில் மோதிய நிலையில், 50 மீட்டர் தூரத்திற்கு பள்ளி வேன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன் வேனில் இருந்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். வேன் ஓட்டுநர் உள்பட 5 பள்ளி குழந்தைகள் வேனில் பயணம் செய்த நிலையில் , இந்த கோர விபத்தில் 6 வகுப்பு படித்து வந்த நிவாஸ்(12) என்கிற மாணவனும், 11ம் வகுப்பு படித்து வந்த சாருமதி (16) என்கிற மாணவியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய வாகனம் முழுவதுமான உருக்குலைந்துபோன நிலையில், மாணவர்களின் பாடப்புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்றவை ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றும் ரயில் கடைசி பெட்டியில் இருந்தும் இருவர் இறங்கி உடனடியாக மாணவர்களை மீட்பதற்காக ஓடி வந்துள்ளனர். அப்போது மின்கம்பி அருந்து விழுந்ததில் 3 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். இதில் அண்ணாதுரை என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வேன் ஓட்டுநர் மற்றும் 2 பள்ளி மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செழியன் என்கிற மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் உயிரிழந்த சாருமதி மற்றும் செழியன் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி ஆவர்.

மேலும், ரயில்வே கேட்டை மூடுவதற்காக பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பர் வடமாநில இளைஞர் பங்கஜ் குமார் சர்மா, ரயில் வரும்போது கேட்டை மூடாமல் விடப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அவர் பணியின்போது மது அருந்திவிட்டு தூங்கியதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள் , ரயில்வே கேட் கீப்பர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் கேட் கீப்பர் கேட்டை மூட மூயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தியதாகவும், அதன்பேரிலேயே கேட் கீப்பர் கேட்டை மூடாமல் பள்ளி வேனை மட்டும் அனுமதித்ததாகவும் , அதோடு ரயில் வருவதை கவனிக்காமல் வேகமாக தண்டவாளத்தை கடக்க முயன்றதே விபத்துக்கு காணரம் என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் விபத்துக்குக் காரணமான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் , ரயில்வே போலீஸார் அவரை கைது செய்து தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் , செம்மங்குப்பல் ரயில்வே கேட் பகுதி மற்றும் கீப்பரின் அறையில் ஆய்வு மேற்கொண்டார். செம்மங்கும் ரயில்வே கிராசிங்கில் இண்டெலாக்கிங் சிஸ்டம் இல்லை என கூறப்படுகிறது.
பொதுவாக NON INTERLOCKING ரயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலம் தகவல் தரப்படும். தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டு கேட் மூடியதை உறுதிபடுத்திய பின்னரே ரயில் செல்வதற்கு சிக்னம் அளிக்கப்படும். ஆனால் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை மூடிவிட்டதாக உறுதி அளித்த பின்பு, விதிகளை மீறி பள்ளி வேனை மட்டும் கேட் கீப்பர் அனுமதித்துள்ளார். இதனாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருபக்கம் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் , கேட்டை திறந்துவிட்டதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வே கிராஸிங் கேட் திறந்திருந்ததால் தான் , கடக்க முயன்றதாக பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரவு நேர பணியாளர் என்றும், காலை நேரத்தில் பணிக்கு வர வேண்டிய கேட் கீப்பர் 7.45 மணி வரை பணிக்கு வராதது ஏன்? எனவும், ஓட்டுநரே கேட்டை திறக்கும்படி கேட்டிருந்தாலும், ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் எப்படி கேட்டை திறக்கலாம் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என மாணவர் விஸ்வேஷின் தந்தை தெரிவித்திருக்கிறார். விபத்து குறித்தான முரண்பட்ட தகவல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


