#BREAKING தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி? விரிவான தகவல்
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி நாளை எண்ணப்படுகிறது. இதற்காக மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 70 கம்பெணி துணை படையினர் உள்ளிட்ட மொத்தம் 18 ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை பணியில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இதன்படி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் வாக்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் மேஜைகள் போடப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்சமாக 14 மேஜைகள் மூலம் அதிகபட்சமாக 24 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் மேஜைகளை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும். இதன்படி ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண் பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு கணினி பதிவாளர் என்று மொத்தம் 4 பணியாளர்கள் இருப்பார்கள். மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதன்படி முதலில் தபால் வாக்குக்கள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள் எண்ணும் முறை
- தபால் வாக்குகளை பொறுத்த வரையில் 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை போடப்பட்டுள்ளது.
- முதலில் ஒரு சட்டமன்ற தொகுதியில் வரப்பெற்ற மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும்.
- இதனைத் தொடர்ந்து தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லு படியாகும் வாக்குகள் மற்றும் செல்லுபடியாகத வாக்குகள் என்று தனியாக பிரிக்கப்படும்.
- தபால் வாக்கு சீட்டில் ஒரு வேட்பாளருக்கான பகுதியில் டிக் செய்து இருந்தால், சீல் வைத்து இருந்தால், வேட்பாளரின் பெயரை எழுதி இருந்தால் அந்த தபால் வாக்கு செல்லும்.
- தபால் வாக்கு நிராகரிப்பை பொறுத்தவரையில் தபால் வாக்கு படிவத்தில் உரிய அலுவலரின் கையெழுத்து மற்றும் முத்திரை இல்லாவிட்டால் அந்த தபால் வாக்கு செல்லுபடியாகது. மேலும். இரண்டு வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் டிக் செய்து இருந்தாலும் அந்த வாக்கு செல்லுபடியாகது.
- இறுதியாக செல்லும் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். செல்லும் தபால் வாக்குகள் ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டு முகவர்களின் காண்பிக்கப்பட்டு, அந்த வேட்பாளர்களுக்கான சிறிய பெட்டியில் போடப்படும்
- இறுதியான தபால் வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டு இவிஎம் கடைசி சுற்றுக்கு முன்னதாக தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் முறை
- காலை 8 மணிக்கு பாதுகாப்பு அறையின் சீல் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் அகற்றப்படும்.
- இதனைத் தொடர்ந்து தேர்தல் பணியாளர்கள் மூலம் கட்டுபாட்டு கருவி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து வரப்பட்டு மேஜையில் வைக்கப்படும்.
- இதனைத் தொடர்ந்து மேஜையில் கட்டுப்பாட்டு கருவியின் சீல் அகற்றப்பட்டு முதலில் அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காண்பிக்கப்படும்.
- முகவர்கள் தங்களிடம் உள்ள 17சி படிவத்தோடு இதை ஒப்பீட்டு சரிபார்த்து கொள்ளலாம்.
- இதனைத் தொடர்ந்து ரிசல்ட் பொத்தானை அழுத்தினால் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்கு விவரங்கள் காண்பிக்கப்படும்.
- ஒவ்வொரு சுற்று முடிவிலும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் அந்த வைக்கப்பட்டு அறிவிப்பு பலகையில் எழுதப்படும்.

