“சேகர்பாபுவிற்கு சனி நான்தான்... கோயில் நிதியில் ரெசார்ட்! சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன்”- ஹெச்.ராஜா
கடந்த 2018ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினர் அந்த பகுதி கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது அதனால் ஊர்வலம் செல்ல கூடாது என்று கூறியதால் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அவதூறாக பேசிய நிலையில் திருமயம் காவல்துறையினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை திருமயம் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் ஏற்கனவே இரண்டு முறை ஹெச். ராஜா ஆஜராகி இருந்த நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் ஆஜரானார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, "டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் நாளை நீதிமன்ற உத்தரவுபடி இரண்டு பேர் சிறைக்குச் செல்வது உறுதி. அது மணிஷ்ஷோடியகவாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்கிற தகவல் வந்துள்ளது. வட இந்தியர்களை பற்றி அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன் மற்றும் அன்பரசன் கூறிய கருத்துக்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வட இந்தியாவில் ஒளிபரப்பப்படும், அமைச்சர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை பாஜக சார்பில் எடுக்கப்படும். இந்தியா கூட்டணியில் அதன் பிறகு என்ன நடக்கும் பாருங்கள்! 24 மணி நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தாங்கள் நடத்திவரும் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்க வேண்டும், வியாபாரத்திற்காக நீங்கள் முன்மொழிக் கொள்கையை கற்றுக் கொடுப்பீர்கள். ஆனால் ஏழை குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்கக்கூடாதா? மூன்றாவது மொழி படி என்று கூறுவது கருத்து திணிப்பாக கூறப்படுகிறது. அதே போன்று படிக்காதே என்று கூறுவதும் கருத்து திணிப்பு தானே? தமிழ்நாடு அரசு பிடிவாதத்தை விட்டுவிட்டு ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழி படிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஏற்கனவே உள்துறை அமைச்சர் விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும் என்று அறிவித்துவிட்டார், அதன் பிறகு எதற்காக நேற்று நடந்த கூட்டம். நேற்று கூடினர், உண்டனர், பிரிந்தனர் . அதுதான் நேற்றைய கூட்டத்தில் நடந்தது.
சேகர்பாபுவிற்கு சனி நான்தான் என்று ஏற்கனவே ஒப்பு கொண்டு விட்டேன், மாசாணி அம்மன் கோயில் நிதியை எடுத்து ரிசார்ட் கட்டுவதற்கு 3.5 கோடி ரூபாய் மதிப்பில் தீட்டியதை நீதிமன்ற உத்தரவுப்படி தடுத்து நிறுத்தப்பட்டது. சேகர்பாபு செய்த துரோகத்திற்கு அவருக்கு சிறைக்கு அனுப்பும் வேலையை இந்த சனி தான் செய்யும். இந்துக் கோயிலில் வழிபட சென்ற நான்கு பேர் இதுவரை அடிப்படை வசதி இல்லாமல் இறந்துள்ளனர். இறந்தவர்களின் உறவினர்களிடம் கட்டாயப்படுத்தி காவல்துறையினர் எழுதி கையெழுத்து பெற்றுள்ளனர். கோயிலில் உயிரிழந்த பக்தர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்க வேண்டும். கள்ளச்சாராயத்தால் இறந்த குடும்பத்திற்கு 10 லட்சம் ஏற்கனவே அரசு நிதி கொடுத்தது தானே அது போன்று இதற்கும் கொடுக்க வேண்டும். தீய திமுக அரசு பேரோடும் வேரோடு மண்ணோடும் 26 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்படும்" என்றார்.


