அடிமடியிலேயே கைவைத்த அறிவாலய அரசு! தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றிக் கொள்ளை- ஹெச்.ராஜா

வறுமையின் பிடியில் வாழ்க்கை நொறுங்கிக் கிடக்கும் தூய்மைப் பணியாளர்களை மனசாட்சியின்றி ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் அளவிற்கு, முதல்வரும் அவரது கூட்டணிக் கட்சியினரும் மதியிழந்து விட்டார்கள் என்பது வெட்கக்கேடானது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா சாடியுள்ளார்.
இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “அடிமடியிலேயே கைவைத்த அறிவாலய அரசே, அரியணையை விட்டு இறங்கு! அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளன்று நலிவடைந்த 213 தூய்மைப் பணியாளர்களுக்கு, நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகளை வழங்குவோம், அவர்களைத் தொழில் முனைவோர் ஆக்குவோம் என தம்பட்டம் அடித்த திமுக அரசு, தங்களின் ஊழலுக்கான அடுத்த வடிகாலாகத் தான் அத்திட்டத்தையும் கையாண்டுள்ளது என்ற தகவல்களைக் கேட்கையில் அத்தனை வயிற்றெரிச்சலாக இருக்கிறது.
காரணம், எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆளுக்கு ரூ.65 லட்சத்தைக் கடனாகத் தூக்கிக் கொடுத்துள்ளது தமிழகத்தின் கூட்டுறவு வங்கிகள், திமுக-வின் கூட்டணியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை-இன் குடும்பத்திற்கு ரூ.524 கோடி மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு ஒப்பந்தத்தை வாரி வழங்கியுள்ளார்கள் அரசு அதிகாரிகள், ஆனால் அந்த திட்டம் உண்மையான பயனாளிகளையும் சென்று சேரவில்லை, அத்திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் யாரென்றும் தெரியவில்லை.
ஆக, ஒட்டுமொத்த அரசு இயந்திரமே அறிவாலய அரசின் இந்த ஊழலுக்கு உற்ற துணையாக ஒத்து ஊதியுள்ளது, அதுவும் பொம்மை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினின் நேரடிக் கண்காணிப்பில். அதானே மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் தினுசு தினுசாக திருடித் தின்னலாம் என்பதில் திமுக-வை மிஞ்ச எவரும் இல்லை என்பது நாம் அறிந்ததுதான். ஆனால், ஏற்கனவே வறுமையின் பிடியில் வாழ்க்கை நொறுங்கிக் கிடக்கும் தூய்மைப் பணியாளர்களை மனசாட்சியின்றி ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் அளவிற்கு, முதல்வரும் அவரது கூட்டணிக் கட்சியினரும் மதியிழந்து விட்டார்கள் என்பது வெட்கக்கேடானது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.