பட்டப்பகலில் வீடு புகுந்து கணவன், மனைவி வெட்டி படுகொலை

 
ழ்ச் ழ்ச்

சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து, கணவன் மனைவி இருவரையும் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாநகர்,  சூரமங்கலம் அருகே உள்ள  ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாரதி நகர் ,  எட்டிக்குட்டை தெருவை சேர்ந்தவர் முதியவர்  பாஸ்கரன் (70), இவரது மனைவி வித்யா (65). இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ், வாசுதேவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வீட்டின் முன் பகுதியில் உள்ள மளிகை கடையில் இருந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக ,  கடையை மூடிவிட்டு  வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாஸ்கரனையும், வித்யாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். சத்தம் கேட்டு அங்கு திரண்ட  அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது , சம்பவ இடத்திலேயே வித்யா உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாஸ்கரன் இறந்து விட்டதாக கூறினர். இந்த இரட்டை படுகொலை  தொடர்பாக சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். இந்த இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.