இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை- அனாதையான 2 பெண் பிள்ளைகள்

 
suicide

சோளிங்கர் அருகே இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்ட ராயன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா(45) கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய  மனைவி சுகன்யா(40) ஆகிய இருவருக்கும் 19 வயது கல்லூரி படிக்கும் ஒரு மாணவியும், 18 வயது, +2 படிக்கும் மாணவி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ராஜாவின் மனைவி சுகன்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்கு போதிய வருமானம் இல்லாமல் தனது மனைவி உடல் மோசமான நிலையில் செய்வதறியாமல் குடும்ப சூழல் காரணமாக மன உளைச்சலில் இருந்த ராஜா, மனைவி ஆகிய இருவரும் வாலாஜா சோளிங்கர் செல்லும் சாலையில், நீலகண்ட ராயன் பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சோளிங்கர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களை மீட்டு வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சோளிங்கர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை காப்பாற்ற முடியாமல் போன கூலி தொழிலாளி, இரண்டு பெண் பிள்ளைகளை அனாதையாக விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தை, தாய் இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.