மனைவி கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்!

 
 suicide  suicide

சென்னை அடுத்த மறைமலைநகர் அருகே குடும்பத் தகராறு காரணமாக வெல்டிங் தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் அந்தப் பகுதியில் சொந்தமாக வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்தார் இவருக்கும் ஜாஸ்மின் என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் போதையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணன் வழக்கம் போல் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜாஸ்மின் அவரை கடுமையாகக் கண்டித்துள்ளார். பின்னர் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார் மனைவி கண்டித்துவிட்டுச் சென்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து வீட்டில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார் யாரும் இல்லாத நிலையில், அவரது உடல் வீட்டிற்குள்ளேயே கிடந்தது.

தொடர்ந்து வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கண்ணன் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குடும்பத் தகராறு தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோகமான சம்பவத்தில், கண்ணன் எளிதாகப் பூச்சி மருந்தை வாங்கித் தற்கொலை செய்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முறையாகப் பூச்சி மருந்துகள் விவசாயப் பயன்பாட்டிற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். கடைகளில் பூச்சி மருந்து வாங்குபவர்களின் பெயர் விலாசம், ஆதார் எண் மற்றும் எதற்காக வாங்குகிறார்கள் என்ற விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் எவ்வித விசாரணையும் இன்றி பொதுமக்களுக்குப் பூச்சி மருந்துகள் வழங்கப்படுவது இது போன்ற தற்கொலைகளுக்குத் தூண்டுகோலாக அமைகிறது

Advertisement

விவசாயி அல்லாத நபர்களுக்கு, தகுந்த காரணமின்றி பூச்சி மருந்து வழங்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைக் கண்காணிக்க வேளாண்மைத் துறை மற்றும் காவல்துறை இணைந்து அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறு குடும்பத் தகராறுகளுக்குக் கூட உயிரை மாய்த்துக் கொள்ளும் மனப்பான்மை மதுப்போதையாலும், மன அழுத்தத்தினாலும் ஏற்படுகிறது. எனவே, உள்ளூர் அளவில் மக்கள் நல்வாழ்வு மையங்கள் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மதுப்பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணம் குறித்த விழிப்புணர்வு முகாம்களை அரசு மாவட்ட வாரியாக நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..