மனைவி, மகளை கொடூரமாக கொன்ற நபர்! உண்மை காரணத்தை ஆராயும் போலீசார்
கரூரில், மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற நபர் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து அதிர்ச்சி தகவலை கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் தென்காசி பகுதியை சேர்ந்தவர். 20 வருடங்களுக்கு முன்பு கரூர் வந்த இவர், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6 ஆண்களுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரதிபாலா ( 5) என்ற பெண் குழந்தை உள்ளது.
இநிலையில், அவரது மனைவி கல்பனா 3 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பிய செல்வகணேஷ், தனது மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கமேடு போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து செல்வகணேஷிடம் விசாரித்துள்ளனர். அப்போது போலீசாரின் நடவடிக்கை பயந்து செல்வகணேஷ், தனக்கு தீரா தொற்று இருப்பது உறுதியானதாகவும், இது வெளியில் தெரிந்தால், எனக்கு மட்டுமின்றி எனது மனைவி, குழந்தைக்கும் அசிங்கம் என்பதால் இவ்வாறு செய்தேன் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உடல்நலம் தேறிய அவரிடம் போலீசார், மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது செல்வகணேஷ் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து அவ்வாறு கூறிவிட்டேன், எனக்கு தொற்று நோய் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்வகணேஷ் மீது கொலை உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து கொலைக்கான உண்மை காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


