காதல் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் கணவன் தீக்குளித்து தற்கொலை
மதுரை மாவட்டம் பாலமேட்டில் மனைவி வேறு ஒருவருடன் சென்ற விரக்தியில் காவல் நிலையம் அருகே தீக்குளித்த கணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வசித்து வருபவர் கருப்பையா. இவரது மகன் பொன்வேந்தன் வயது (35). சென்னையில் கால் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வரும் இவர், முத்துப்பிள்ளை வயது(30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் முத்து பிரியா பாலமேட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அடிக்கடி டீசல் நிரப்ப வந்த லாரி டிரைவர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்படவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு முத்துப்பிள்ளை அந்த நபருடன் தலைமறைவானார். இது தொடர்பாக பாலமேடு காவல் நிலையத்தில் பொன்வேந்தன் புகார் கொடுத்துள்ளார். மேலும் காதல் மனைவி தன்னை விட்டு வேறொருவருடன் பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்தவர் நேற்று திங்கள் கிழமை மாலை பாலமேடு காவல் நிலையம் செல்லும் வழியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து படுகாயத்துடன் அவரை மீட்ட பாலமேடு போலீசார் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பொன்வேந்தன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பாலமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.