மனைவியின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய கணவன்!
பிரிந்து சென்ற காதல் மனைவி தங்கியிருந்த வீட்டில் நாட்டு வெடி குண்டு வீசிய கணவனால் மதுரவாயலில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், குமுடிபூண்டியை சேர்ந்த சக்திவேலும் மதுரவாயலை சேர்ந்த வர்ஷா ஆகியோரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதமாக வர்ஷா கணவர் சக்திவேலை பிரிந்து மதுரவாயலில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மனைவியை சந்திக்க வந்த சக்திவேல் வர்ஷாவை கத்தியால் வெட்டிவிட்டு சென்றுள்ளார். சிறிய காயம் என்பதால் அதனை பெரிது படுத்தவில்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பு வர்ஷாவின் சித்தப்பா நின்று இருந்த போது சக்திவேல் அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மறைத்து வைத்து இருந்த வெடிகுண்டை வர்ஷாவின் வீட்டின் முன்பு வீசியுள்ளார். இதில் ரமேஷ் நூல் இழையில் தப்பியுள்ளார்.பின்னர் மற்றொரு குண்டை மீண்டும் வீசி அங்கிருந்து தப்பி சென்றார். அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதால் மதுரவாயலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம் வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சக்திவேலை தேடி வருகின்றனர்.


