மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற கொடூர கணவன்
வேலூர் அருகே மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூரை சேர்ந்தவர் முருகன் (48), இவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்கிறார். இவரது மனைவி அன்பழகி (45). இவர்களுக்கு திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் முருகனுக்கு சந்தேகம் இந்ததாக கூறப்படுகிறது. இதனால் மது போதையில் அடிக்கடி மனைவியை அடித்தும் துன்புறுத்தியுள்ளார். ஏற்கனவே 2 முறை மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய முருகன் 3 வது முறையாக மனைவியை கொல்ல முயற்சித்து, வீட்டு இரும்பு கேட்டில் மின்வயரை பொருத்தி தரையில் தண்ணீரை ஊற்றிவிட்டு சுவிட்ச் ஆன் செய்து, ஒன்றும் நடக்காதது போல் கேட்டை திறக்கும்படி மனைவி அன்பழகியை அழைத்துள்ளார். இதையறியாத அன்பழகி கதவை திறக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அன்பழகியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்து விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிந்து முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


