நான் ஓடி ஒளிபவன் அல்ல, எதையும் எதிர்கொள்பவன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

"கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது.தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில், இந்த பிரச்னையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். திறந்த மனம் கொண்டு குற்றம் செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறேன் என்றார்.


