‘செந்தில் பாலாஜியை நீக்க எனக்கு அதிகாரம் உள்ளது’- ஆளுநர் கடிதம்..

 
senthil balaji rn ravi

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தனக்கு அதிகாரம் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட  பல்வேறு தலைவர்கள்  ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம்  ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 5 பக்கங்கள் கொண்ட  அந்தக் கடிதத்தில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற்று இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும் காரணத்தால் தற்போது செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 ‘செந்தில் பாலாஜியை நீக்க எனக்கு அதிகாரம் உள்ளது’- ஆளுநர் கடிதம்..

மேலும், “இது தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பது சரியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அவர்களால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அட்டர்னி ஜெனரலை (மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்) அணுகி கருத்து கேட்க உள்ளேன். இதற்கிடையில், அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு, என்னிடம் இருந்து மீண்டும் தெரிவிக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

 செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால், வழக்கில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அது சட்டதிட்டத்தை பாதிக்கும். இப்படியான சூழல்களில் இந்திய அரசியல் சாசன பிரிவுகள் 154, 163, 164 ஆகியவற்றின்கீழ், செந்தில் பாலாஜியை நீக்க எனக்கு அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் நான் அவரை நீக்குகிறேன். விளக்கம் தராமல் ஜூன் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில், விரும்பத்தகாத மற்றும் வரம்பு மீறிய சொற்களை பயன்படுத்தி கடிதம் எழுதினீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.