“நான் அந்த கடையில ஜிலேபி சாப்பிட்டதேயில்ல" - வானதி சீனிவாசன் விளக்கம்..
“நான் அந்த கடையில ஜிலேபி சாப்பிட்டதேயில்ல" அன்னபூர்ணா சீனிவாசன்தாமாகவே முன்வந்து மன்னிப்புக் கோரினார் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் புகார் தெரிவித்தார். அவர், “எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. உங்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மா ( எம்எல்ஏ வானதி சீனிவாசன்) ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். அவங்க வரும்போதெல்லாம் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. ஸ்வீட்டுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி , காரத்திற்கு 12% சதவிகிதம் ஜிஎஸ்டி, பேக்கரியில் பிரெட், பண்ணு தவிர எல்லாவற்றிற்கும் 28 % வரி உள்ளது.
இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க.. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிர்க்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவிகிதம் வரி என்றால் சண்டை போடுவாங்க. ஒரே பில்லில்.. ஒரு குடும்பத்திற்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட முடியவில்லை. தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், நேற்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் மன்னிப்புக் கோரிய மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதிகார திமிரின் அழுத்தத்தால் சீனிவாசன் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மகளிரணி தலைவி வானதி விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் தாமாக முன்வந்து மன்னிப்புக் கேட்டார். அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய அமைச்சரிடம் நான் மன்னொபுக் கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார்.
பின்னர் ஹோட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன், உங்களது மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். தான் பேசியது இணையத்தில் வேறுமாதிரி சொல்வதாக வருத்தம் தெரிவிப்பதாக சீனிவாசன் கூறினார். அன்னபூர்ணா ஹோட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறியிருந்தார். நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சனை செய்ததோ இல்லை” என்று தெரிவித்தார்.