"முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு குறித்த அரசியலை..." - நாராயணன் திருப்பதி விமர்சனம்

 
narayanan stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்த அரசியலை இனியாவது கைவிடுவார் என நம்புகிறேன் என்று  நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி , "மருத்துவ முதுநிலை படிப்புகளில் அனுமதிக்கான  நீட் தேர்வுக்கு பிறகான கவுன்சிலிங்கில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டது என்று விமர்சிப்பவர்கள், அறியாமையில் பேசுவதாக பொருள் கொள்ள வேண்டும் அல்லது அரசியல் உள்நோக்கத்தோடு வன்மத்தை கக்குகிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழக முதல்வரும் இது குறித்து விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். 

stalin

சராசரி மதிப்பெண்(Percentile) என்றால் என்ன, விழுக்காடு (Percentage) என்றால் என்ன  என்பதை பற்றிய புரிதல் இல்லாமல் முதலமைச்சர் பேசுவது வியப்பை அளிக்கிறது. கடந்த வருடம் கூட இதே முதுநிலை படிப்புகளில் நீட் தேர்வுக்கு பிறகான கவுன்சிலிங்கிற்கு '50 பெர்சன்டைல்' கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, இரு சுற்றுகளுக்கு பின்னர் காலியாக இருந்த முது நிலை படிப்புகளுக்கான கவுன்சிலிங்கின் இறுதி சுற்றில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 25 பெர்சன்டைலாக குறைக்கப்பட்டது.  

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான் செட்' தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு பின்னர் கவுன்சிலிங்கில் குறிப்பிட்ட பெர்சன்டைல் மதிப்பெண்  தான் 'கட்-ஆஃப்' என நிர்ணயிக்கப்படும். பின்னர் அந்த 'கட்-ஆஃப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் தவிர மீதம் உள்ள இடங்களுக்கு 0% பெர்சன்டைல் மட்டுமல்ல சில நேரங்களில் (-) மதிப்பெண் பெர்சன்டைல் பெற்றவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது முதல்வருக்கு தெரியுமா? 


அதே போல் தான், இந்த ஆண்டும் முது நிலை படிப்புக்கான நீட் தேர்வுக்கு பின்பான கவுன்சிலிங்கில் 50 பெர்சன்டைல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்ததையடுத்து இரண்டு சுற்றுகள் கவுன்சிலிங் நடந்து முடிந்து விட்டன. அந்த இடங்கள் போக மீதியுள்ள இடங்களுக்கு மூன்றாவது சுற்றில் '0' பெர்சன்டைல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது வழக்கமான நடைமுறையே. அதாவது 50 பெர்சன்டைல்க்கும் குறைவாக பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் அனுமதிக்கப்படுவர். 

நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த அறிவிப்பினால் நீட் தேர்வினால் ஏற்படும் பலன் பூஜ்யம் என்றும், அர்த்தமற்றது என்றும், தகுதி தேவையில்லையா என்றும், நீட் கண்துடைப்பு நாடகம் என்றும் விமர்சித்துள்ளார். அப்படியானால், தமிழக அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் டான்செட் தேர்வுக்கு பின்னர் எம் .பி.ஏ., எம்.சி.ஏ, எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முது நிலை படிப்புகளில் கவுன்சிலிங்கில் '0' பெர்சன்டைல் மற்றும் - பெர்சன்டைல் பெற்றவர்கள் கூட அனுமதிக்கப்படுவதால் டான்செட் தேர்வு  கண்துடைப்பா? நாடகமா? அர்த்தமற்றதா? பலனற்றதா  என்று முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொள்கிறாரா? 

நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது முறையல்ல என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் உணர்ந்து, நீட் தேர்வு குறித்த அரசியலை இனியாவது கைவிடுவார் என நம்புகிறேன்."என்று குறிப்பிட்டுள்ளார்.