திருமாவளவனை தகுதியற்ற தலைவராக தான் நான் பார்க்கிறேன் - எல்.முருகன்..!
திருமாவளவன் அருந்ததியர் மக்கள் பற்றியோ, இட ஒதுக்கீடு பற்றியோ பேச தகுதியற்ற தலைவராக தான் நான் பார்க்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “என்னை திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர் எனக் கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவன் என்பதை நான் பெருமையாக கருதுகிறேன். 2009 ஆம் ஆண்டு, இந்த இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது அனைத்து கட்சி கூட்டம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் கலந்துகொண்டு நிர்வாகிகள் முக்கிய அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் அருந்ததியர் மக்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என டேட்டா உடன் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த டேட்டாவை ஆர்டிஐ மூலம் வாங்கி நான் கொடுத்திருந்தேன். சட்ட ரீதியாக நாங்கள் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக நீதிமன்றத்தில் போராடினோம். திருமாவளவன் சொல்வதைப் போல் எல்லாம் இது எளிதில் கிடைத்துவிடவில்லை
அனைத்து அடிதட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதைதான் பாஜக வலியுறுத்துகிறது. ஒவ்வொரு கீழ் நிலையில் இருப்பவரும் அதிகாரத்தில் வரவேண்டும். அனைவருடைய வளர்ச்சி, அனைவருடைய முயற்சி, அனைவருடைய நம்பிக்கையுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பாஜக உடைய மிக முக்கிய கொள்கை. ஒண்டிவீரன் அவர்களுக்கு திருமாவளவன் சென்று மரியாதை செலுத்தி இருக்கிறாரா? ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய 251 வது நாளன்று தபால் தலை வெளியிட்டு பெருமை செய்தார். குயிலி அவர்களுடைய நினைவு தினத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தாரா ? .
மக்கள் நல கூட்டணியில் இருந்த போது விடுதலை சிறுத்தை கட்சி 25 இடங்களை பெற்றிருந்தது. அதில் ஒரு இடமாவது அருந்ததியர்களுக்கு கொடுத்திருந்தாரா ? கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சீட்டு வாங்கினார் .ஒரு சீட்டு அருந்ததியர்களுக்கு கொடுத்திருக்கிறாரா ? தலித் மக்கள் அனைத்து தரப்பு மக்களும் மேம்பட வேண்டும். நாங்கள் அதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இவரைப்போல பிரிவினைவாதத்தையும் சனாதானத்தை எதிர்த்து பேசி வரவில்லை. ஆன்மீகத்தை ஆதரிப்பவர்கள் நாங்கள். தேசியத்தை ஆதரிப்பவர்கள் நாங்கள். திருமாவளவனை அருந்ததியர் மக்கள் பற்றியோ, இட ஒதுக்கீடு பற்றியோ தகுதியற்ற தலைவராக தான் நான் பார்க்கிறேன்” என எல். முருகன் தெரிவித்துள்ளார்.