மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்தி செல்வேன் - அன்புமணி ராமதாஸ்..!

 
1

பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் பொறுப்பையும் தானே ஏற்பதாக கட்சி கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார் என்றும் தெரிவித்தார். ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமகவுக்குள் பெரும் புயலை கிளப்பியது.

அன்புமணியை பதவி இறக்கம் செய்வது போல் ராமதாஸின் அறிவிப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்தி செல்வேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் பாமக தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல் எனவும் அன்புமணி ராமதஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது எனவும் அன்புமணி நினைவு கூர்ந்துள்ளார்.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும் என்றும் அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்றும் அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது என்றும் அன்புமணி தெளிவுப்படுத்தி உள்ளார்.

மேலும் கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன என்றும் முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது, இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.


மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு என்றும் அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.


மருத்துவர் அய்யா அவர்கள் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்றும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிதத்துள்ளார். அனைத்து பணிகளையும் தான் ஒருங்கிணைத்து வருவதாகவும் அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது தனது பெரும் கடமை என்றும் அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம் என்றும தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் தனது தலையாய பணி என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் தனது முழு முதல் கடமை என்றும் அதற்காக பாட்டாளி சொந்தங்களை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.