ரூ.2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை

 
தற்கொலை

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி விவேகானந்தர் தெரு பகுதியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவரின் 14 வயது மகன் மதுரை கீழமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி காலை மாணவன்  வழக்கம் போல ஆட்டோ ஒன்றில் பள்ளிக்கு சென்ற போது அதனை பின்தொடர்ந்து ஆம்னி காரில் சென்ற கும்பல் ஆட்டோ ஓட்டுனர் பால்பாண்டியை அரிவாளால் தாக்கிவிட்டு மாணவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் கண்ணை கட்டி துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திசென்றனர்.


இதனையடுத்து மாணவனை திரும்ப ஒப்படைக்க 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லையெனில் ஈவு இரக்கமின்றி கொலை செய்துவிடுவதாக ஆட்டோ ஓட்டுநரின்  செல்போன் எண்ணில் இருந்து மாணவனின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் மாணவனின் ராஜலட்சுமி கடத்தல் கும்பல் குறித்தும், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோவுடன்  எஸ்.எஸ்.காலனி நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவரின் செல்போன் எண்ணை ஆய்வுசெய்து கடத்தல் கும்பலை காவல்துறையினர் பின்தொடர்ந்ததை அறிந்துகொண்ட கடத்தல் கும்பல் செக்கானூரணி அருகே கின்னிமங்கலம் காட்டுப்பகுதிக்குள், கண்ணை கட்டியபடி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரையும் இறக்கவிட்டு தப்பினர்.

மதுரையில் 'மங்காத்தா' பாணி..2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்! ரவுடியுடன்  கூட்டு சேர்ந்த 'மாஜி' போலீஸ் | Arrest of ex-police mastermind in Madurai  boy abduction case - Tamil ...


தப்பியோடிய கும்பலை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் தேனி, தூத்துக்குடி, நெல்லை , தென்காசி , பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு சென்று. தீவிரமாக தேடிவந்தனர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முன்னாள் காவலரான செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வீரமணி, காளிராஜ் ஆகிய 4 பேர் கைது செய்தனர். இதையடுத்து நால்வரிடமும் காவல்துறையினரிடம் நடத்திய விசாரணையின் போது நால்வரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு என கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரின் மனைவி (சூர்யா), மற்றும் பிரபல ரவுடி ஐகோட் மகாராஜா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில்  தலைமறைவாக உள்ள சூர்யாவை, கைது செய்ய தனிப்படை போலீசார் குஜராத் சென்றுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சூர்யா மற்றும் மாணவனின் தாயார் ராஜலெட்சுமி இடையே காம்ப்ளக்ஸ் விற்பனையில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் இடம் விற்பனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சூர்யா ரவுடி மகாராஜா மூலமாக மாணவனை கடத்தி ராஜலெட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் கொண்டிருந்தனர். இந்நிலையில் குஜராத் காந்தி நகரில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் அவருடைய மனைவி சூர்யா விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு குஜராத் மாநிலத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த சூர்யாவின் தாயார் எஸ் எஸ் காலனி காவல் நிலையம் மற்றும் மதுரை மாநகர காவல் துறை ஆணைய அலுவலகத்திற்கு வந்து நடைபெற்ற சம்பவங்கள் அனைத்திற்கும் காரணம். மைதிலி ராஜலெட்சுமி மற்றும் கிஷோர் ஆகியோர் தான் தனது மகள் சூர்யாவை ஏமாற்றி பணம் மற்றும் பீயூட்டி பார்லரை கைப்பற்றி வைத்து கொண்டு தற்போது பொய்யான புகாரை கொடுத்து சூர்யாவை தற்கொலை செய்ய வைத்துவிட்டதாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சூர்யாவின் தாய் உமா, பாட்டி பத்மாவதி உள்ளிட்டோர் வந்திருந்த நிலையில் குஜராத்தில் சூர்யா அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துவிட்டதாக தெரிவித்தனர். தனது மகள் இறப்புக்கு காரணமான ராஜலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.