மனசாட்சியே இல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூல் - கலசலிங்கம் பல்கலை.க்கு ஐகோர்ட் கண்டனம்..

 
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழக கல்லூரிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பல்கலைக்கழகமாக கலசலிங்கம் பல்கலைக்கழகம்  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் கல்வியாண்டின் போது எந்த அனுமதியும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி என மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண்டின் போது தான்  ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.  கல்லூரி நிர்வாகம் பி.எட் பட்டப்படிப்பிற்கு அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பத்தி இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி அனுமதி அளிக்கப்படவில்லை.  

மனசாட்சியே இல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூல் -  கலசலிங்கம் பல்கலை.க்கு ஐகோர்ட் கண்டனம்..

 ஆனால் கல்லூரி நிர்வாகம் எதையும் கருத்தில் கொள்ளாமல் மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பி.எட் மாணவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. எனவே தேர்வுக்கு அனுமதி வழங்குமாறு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி கலசலிங்கம் பல்கலைக்கழக நிர்வாகம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.  

அப்போது மனசாட்சியே இல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்த  நீதிபதி, கல்லூரி நிர்வாகம் தனது சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் கலசலிங்கம்  பல்கலைக்கழகத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.   ஏமாறும் மாணவர்கள் மூலம் தனது வங்கி கணக்கை கல்வி நிறுவனம் வைத்துள்ளது என்றும்,  100 மாணவர்களின் எதிர்காலம் கருதி வேறு கல்லூரியில் சேர அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நீதிபதி,   தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக மாணவர்கள் வழக்கு தொடர்ந்த நிவாரணம் பெறலாம் என்றும் தெரிவித்தார்.