திருமணமான மகன் இறந்து விட்டால் அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது- ஐகோர்ட் அதிரடி

 
Highcourt

இந்திய வாரிசுரிமை சட்டத்தின் கிறிஸ்துவபிரிவின்படி திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 

Madras High Court vouches for English as language for communication between  Union and states not adopting Hindi as official language

நாகப்பட்டினத்தை சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸ்-க்கும்,  அக்னஸ் என்பவருக்கும் கடந்த 2004ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மோசஸ் கடந்த 2012ல் இறந்துவிட்டார். உயில் எதுவும் எழுதி வைக்காத மோசசின் சொத்துக்களில் பங்கு கேட்டு அவரது தாய் பவுலின் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம், மோசசின் சொத்தில், அவரது தாய்க்கும் பங்கு உள்ளது என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அக்னஸ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்தது. வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட  வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, வாரிசுரிமை சட்டம் கிறிஸ்துவ 42வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ குழந்தைகளோ இல்லை என்றால் தந்தை சொத்துக்கு வாரிசுதாரராவார். தந்தையும் இல்லை என்றால் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை எனவும்,  மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும் தாய் பங்கு கேட்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், தாய்க்கு பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து தீர்ப்பளித்தனர். வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிய வழக்கறிஞர் மித்ரா நேஷாவுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.