அரசு உழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கொரோனா சிகிச்சை செலவு ரூ.10 லட்சத்தை தாண்டினாலும் அரசே ஏற்கும்..

 
தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சை செலவு ரூ.10 லட்சத்திற்கு மேல் உயர்ந்தால் அதனை அரசே வழங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை ஆட்டுவித்து வந்த  கொரோனா வைரஸ் பாதிப்பினை  உலக சுகாதார அமைப்பு,   உலகளாவிய பொது சுகாதார பேரிடராக அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், பொது சுகாதார திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றை பட்டியலிடப்பட்ட நோயாக தமிழ்நாடு அரசும்  அறிவித்தது.  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  சிகிச்சைக்கு தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின்  முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ்  சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது.

கொரோனா

அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டண விவரங்களும்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி , கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் மக்களின், குறிப்பிட்ட அளவு மருத்துவக்  கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கிறது.

தமிழக அரசு - பரிசு அறிவிப்பு

இதே போல், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை சேர்க்கப்பட்டு அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெறும் நிலையில்,   பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைக்கு வழங்கும். இதற்காக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 கோடியையும், ஓய்வூதியர்களுக்கு ரூ.2.5 கோடியையும் தொகுப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது

 இந்த நிலையில், தற்போது  நேரடி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேல்  உயர்ந்தால், அதை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, கூடுதல் சிகிச்சை செலவினத்திற்காக ரூ.1 கோடியை சுழல் நிதியாக தமிழ்நாடு அரசு விடுவித்திருக்கிறது.