‘யூகங்களின் அடிப்படையில் ஓட்டுனர் ஓட்டினால், குழந்தைகளுக்கு அபாயமாக முடியும்’ - தமிழிசை..!!
பள்ளி வாகன ஓட்டுநர்கள் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், யூகங்களின் அடிப்படையில் அது குழந்தைகளுக்குத்தான் அபாயமாக முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில் வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே செம்மங்குப்பம் என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை இந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது , ரயில் மோதி விபத்துக்குள்ளானது. வேன் ஓட்டுநர் உள்பட 5 பள்ளி குழந்தைகள் வேனில் பயணம் செய்த நிலையில் , இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சிகிச்சை பெற்றுவந்த செழியன் (15) என்கிற மாணவனும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்திற்க்கு ரயில்வே கேட் மூடப்படாதது தான் காணரம் என தெரியவந்துள்ளது. கேட் கீப்பர் அலட்சியமாக தூங்கிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டும் நிலையில், ஓட்டுநர் கேட்டுக்கொண்டதாலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்ததாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “செம்மங்குப்பத்தில்... ரயிலும். பள்ளி வாகனமும் மோதி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியானது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.. அந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..... சிகிச்சையில் இருப்பவர்கள் மீண்டு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்..வாகன ஓட்டுநர்.. ரயில்வே ஊழியர்... யார் தவறு செய்தாலும். கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது. இரட்டிப்பு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்,.. யூகங்களின் அடிப்படையில்... ஓட்டுனர் ஓட்டினால் அது குழந்தைகளுக்கு அபாயமாக முடியும்...
செம்ம குப்பத்தில் அந்த இடத்தில் பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிதி ஒதுக்கி ஓராண்டு காலமாக இடம் தேர்வு செய்து தரப்படவில்லை என்று கடலூர் ஆட்சியர் மீது ரயில்வே நிர்வாகம் தங்களது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறது... அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் எடுத்து பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்... இலக்குகள் சரியாக திட்டமிடப்பட வேண்டுமே தவிர... இழப்புகள்தான்.. இதற்கு வழிவகை செய்யும் என்ற நிலை இருக்கக் கூடாது.. என்பதை கவலையோடு பதிவிடுகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.


